Mittwoch, 1. Februar 2012

பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்! by vayal மகான்கள் தரிசனம், புண்ணியம் என்பர். மகான்களுக்கு சுயநலம் இருக்காது. மக்கள் நலமாக இருக்க வேண்டும்; உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான், அவர்களது எண்ணம். அதனால், அவர்களை நேரில் தரிசிப்பதும் விசேஷம் தான். "நலமாக இரு...' என்று மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, "நேத்ர தீட்சை' என்பர். கையசைத்து, "நலமாக இரு...' என்று மகான்கள் சொல்வதற்கு, "ஹஸ்த தீட்சை' என்று பெயர். மனதால் நினைத்து, "நலமாக இரு...' என்பதற்கு, "மானச தீட்சை' என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம். ஆமையானது, மணலில் முட்டையிட்டு போய் விடும்; ஆனால், அது, தன் முட்டைகளையே மனதில் நினைத்திருப்பதால், குஞ்சு பொரித்து விடும். மீன் முட்டையிட்டு விட்டு, தண்ணீரில் போய் கொண்டிருந்தாலும், தன் முட்டைகளையே நினைத்துக் கொண்டிருக்கும். அடிக்கடி திரும்பித் திரும்பி, முட்டைகளைப் பார்த்தபடி இருப்பதால், முட்டைகள் குஞ்சு பொரித்து விடும்; தாய் மீனின் பின்னாடியே போகும். தன் குஞ்சுகளை திரும்பித் திரும்பிப் பார்க்கும் தாய் மீனின் பார்வை பட்டு, குஞ்சுகள் வளர்ந்துவிடும். இதை, "நேத்ர தீட்சை' என்பர். இப்படியாக, கண் பார்வைக்கு சில விசேஷங்கள் உண்டு; ஆனால், சிலருடைய கண்கள், அப்படி இருக்காது. "என்ன சார்... புது கடிகாரம் வாங்கியிருக்கீங்களா? பேஷ், பேஷ்... ரொம்ப அழகா இருக்கே...' என்று சொல்வர்; தொப்பென்று கீழே விழுந்து, கடிகாரம் உடைந்து விடும். "என்ன மாமி... புதுப் புடவையா, எப்போ வாங்கினீங்க? ரொம்ப அழகா இருக்கே...' என்று சொல்வாள் இன்னொரு மாமி. கண் திருஷ்டி சும்மா விடுமா? கம்பியில் மாட்டி, புடவை கிழிந்து விடும். இதுவும் ஒருவித பார்வை தோஷம்தான். சில குழந்தைகளை, கூப்பிட்டுக் கொஞ்சுவாள், பக்கத்து வீட்டு பாட்டி... "குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு...' என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது. கண்களால் நல்லதும் ஏற்படலாம்; கெடுதலும் ஏற்படலாம். நல்லதை நினைத்து, நல்லதை தேடிப் போக வேண்டும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen