Montag, 6. Februar 2012

இனி இப்படி கனவில்தான் பார்க்கலாம் அல்லது கடையில்தான் ! வருமா அந்தநாள் !! Subject: . தொலைத்தவை எத்தனையோ! அந்த மரங்களும், நிலமும்…. அந்தக் காலம் ஊரில் சொந்த பந்தங்களுடன் இயற்கையோடு ஒன்றி, இயற்கையாக வளர்ந்த கிராமத்துச் சூழற் காலம்… நான் வளர்ந்த வீட்டின் பின் வளவு, இடது பக்க மூலையில் இருக்கும் பச்சைத் தண்ணீர் மாங்காய் மரம் (மாங்காய் பொல்லாத புளிப்பு இல்லாதபடியால் இப்படிப் பெயர் வைத்தோம்.). நாம் நின்றபடியே மாங்காய் பிடுங்க முடிந்த சிறிய குடை போன்ற மரம். ஓட்டு மாங்காய் போன்ற நீண்டு, குண்டாகி, கிளிமூக்குடைய (வளைந்த) மாங்காய். சிலவேளைகளில் நாம்(தம்பி, தங்கைகள்) மரம் ஏறியும் பிடுங்குவதுண்டு. இதைச் சும்மா சாப்பிடுவதிலும், சிறிது சிறிதாகக் கொத்தி உப்புக் கலந்தும் சாப்பிடுவோம். இம் மரத்தடியிலிருந்து 4, 5 அடி தள்ளி ஒரு ஈச்ச மரம் உண்டு. இது காய்ப்பது சிலவேளை எமக்கு மறந்திடும். அப்பா வந்து கூறுவார்..ஈச்சம் பழம் பழுத்திருக்கிறது என்று. அதிகாலை எழுந்து சென்று கத்தரி நிறமாகப் பழுத்தவைகளைப் பிடுங்கி வருவோம். செம்பழமாக இருப்பவைகளை உப்பு நீருள் போட்டு வைத்து பழுத்த பின்பு சாப்பிடுவோம். வீட்டின் முன்புறம் முற்றம் தாண்டி ஒரு பெரீய்யய..மாமரம். 3,4 பார உந்துகள் (லொறிகள்) நிற்கக் கூடிய அளவு பெரிய குடை நிழல் மரம். மாங்காயும் பென்னம் பெரிய குண்டு மாங்காய் காய்க்கும். மரம் பழுத்துக் குலுங்க, அணில் வந்து கொந்தியதும் பழங்கள் நிலத்தில் விழும். அதைத் துப்புரவாக்கி வெட்டி உண்பது மிகச் சுவையாக இருக்கும். அம்மா கூப்பிட்டதும், கந்தையா அண்ணை வந்து மாங்காய்கள் பிடுங்கித் தருவார். பறி கட்டிய கொக்கைத் தடியுடன் வந்து பிடுங்குவார். ஒரு அறையுள் வைக்கோல் பரவி அதில் மாங்காய்களை அம்மா நிலத்தில் பரவி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் வைக்கோலை நீக்கி…நீக்கிப் பார்த்து, பழுக்கப் பழுக்க வெட்டி, வீட்டில் அனைவருக்கும் பங்கு போட்டு எவ்லோரும் உண்போம். ஒரு பழம் சாப்பிட்டாலே பெரும் உணவு மாதிரி வயிறு நிறைந்து விடும். ருசியும் அப்படியே. நிறையப் பழுத்ததும், அம்மா பிட்டு உணவு செய்து மாம்பழத்துடன் உண்போம். மாமரத்தின் அருகே 3 இலுப்பை மரங்கள் இருந்தது. இலுப்பை மரங்கள் பூ பூக்கும் காலத்தில் பூக்கள் விழுந்து மரத்தின் கீழே முத்து முத்தாக இருக்கும் காட்சி அழகோ! அழகு! அது இன்னும் அழகாக இருக்க தம்பி, தங்கைகளோடு வளவு முழுதும் கூட்டி, செடிகள் வெட்டி, கல்லுகள் பொறுக்கித் துப்புரவாக்கி விடுவோம். பிள்ளைகள் நாங்கள் கத்தி, மண்வெட்டி, குப்பைவாரி என்று தூக்கிச் சென்று துப்பரவாக்க, அப்பா தடுக்க மாட்டார். அவரும் நடு நடுவில் வந்து உதவிகள் செய்வார். குப்பைகளை எப்படிப் பிரித்துப் போடுவது என்று கூறுவார். (பீங்கான் ஓடு வேறாக, முள்ளு, குச்சிகள், நல்ல குப்பைகள் எமது நெல் வயலுக்கு உரமாக). தேவையற்ற குப்பைகளுக்கு நெருப்பு மூட்டி உதவி செய்வார். தீ ஏற்றும் போது எங்களையும் கூட்டிச் சென்றே நெருப்பு வைப்பார். அவருக்குத் தெரியும் அது எமக்கு மகிழ்வான அனுபவம் என்று. நெருப்பு எரிவது பார்க்க மிக ஆசையாக இருக்கும். அப்பா அருகில் இருப்பார். பின்னர், மாலையில் குளித்து அழகாக அமர்ந்து ரசிப்போம். இளம் காற்று வீசும். அப்பா அம்மாவும் எங்களுடன் இருப்பார்கள். இலுப்பை மரங்களின் கீழ் 3 அல்லது 4 கட்டையான வாழை மரம் போல, நீண்ட வெள்ளைக் கொத்துப் பூ பூக்கும் ஒரு வகை பூ மரம் இருந்தது. (படத்தில் உள்ளது போல). ஒரு வகை மணிவாழை சாதி. (கனாஸ் canas என்றும் கூறுவர்.) (செல்லமே தொடர் நாடக முன் பாடல் காட்சியில் அந்த பூவுடன் நீண்ட இலை கொண்ட, வாழை போன்ற கட்டை மரம் வருகிறது.) இது பூ பூக்கும் காலமும், ஆசை ஆசையாக விடிய எழுந்து பார்ப்போம். வீட்டுப் படலையோடு 3 பெரிய புளிய மரம். (இதன் காய் போல பூவும் உண்ண சுவையானது.) அதன் கீழே கூட்டித் துப்புரவாக்கி, அயல் வீட்டு கோபால், தங்கைமாருடன் கிரிக்கெட் அடிப்போம், இன்னும் பல விளையாட்டுகள் விளையாடுவோம். பக்கத்தில் முருங்கை மரத்தில் இலையும் காயும் பிடுங்கி அம்மாவிற்குச் சமைக்கக் கொடுப்பது. அடுத்த வீட்டு அக்காவுடன் அந்த வேலிப் பொந்தினால் சென்று கதைப்பது. வேலியால் எட்டிக் கதைப்பது. முற்றத்தில் தொடங்கி நடுவளவு வரை வரிசையாக மூன்று பலா மரங்கள். பலா மரத்தின் கீழ் பாய் போட்டு எஸ்.எஸ். சி (10ம் வகுப்பு) பரீட்சைக்குப் படித்தது. நீண்ட கம்பி குச்சியால் பலா இலைகளை எமது ஆட்டிற்காகச் சேகரித்தது. வீட்டின் முற்றத்து பப்பாளி மரம், அதன் பழங்களின் சுவை. இப்படி தொலைத்தவை எத்தனையோ!….எத்தனை நினைவுகள் மறக்க முடியாதவைகள்! Nyah-Nyah Who me?

Keine Kommentare:

Kommentar veröffentlichen